தலச்சிறப்பு |
திருக்கடவூரில் அமிர்தகடேஸ்வரர் மீது பாசக்கயிற்றை வீசியதால் ஏற்பட்ட பாவம் நீங்குவதற்கு எமதர்மராஜன் இத்தலத்திற்கு வந்து, சிவபெருமானை வழிபட்டு பாவம் நீங்கப் பெற்றான். தருமராஜன் வழிபட்ட தலமாதலால் 'தருமபுரம்' என்று பெயர் பெற்றது.
இத்தலத்து மூலவர் 'யாழ்முரிநாதேஸ்வரர்' லிங்க மூர்த்தியாக சதுர வடிவ ஆவுடையுடன் காட்சி தருகின்றார். 'தருமபுரீஸ்வரர்' என்னும் திருநாமமும் உண்டு. அம்பிகை 'தேனமிர்தவல்லி' என்னும் திருநாமத்துடன் அருள்புரிகின்றாள். அருகில் யாழ்முரிநாதர் உற்சவ மூர்த்தி உள்ளார்.
கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டேஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். பிரகாரத்தில் 63 நாயன்மார்கள், விநாயகர், சோமாஸ்கந்தர், வள்ளி, தேவசேனை சமேத சுப்பிரமண்யர், காசி விஸ்வநாதர், சந்திரசேகரர், மகாலட்சுமி, நடராஜர், நவக்கிரகங்கள், பைரவர், சூரியன், சந்திரன் ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன.
திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வந்தபோது, இத்தலத்தைச் சேர்ந்தவரான திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனாரும், அவரது மனைவியும் உடன் வந்திருந்தனர். இத்தலம் நீலகண்ட யாழ்ப்பாணரின் தாயார் பிறந்த ஊர். அதனால் இவ்வூரில் உள்ள அவரது உறவினர்கள் நீலகண்டரின் யாழ் இசையால்தான் சம்பந்தரின் பாடல்கள் சிறப்பாக உள்ளன என்று புறம் பேசினர். இதைக் கேள்விப்பட்ட யாழ்ப்பாணர், இதைச் சம்பந்தரிடம் கூறி, தனது யாழில் வாசிக்க முடியாத அளவிற்கு பாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
சம்பந்தரும் மாதர் மடப்பிடியும் மட அன்னமும் என்று தொடங்கும் பதிகத்தைப் பாட, நீலகண்ட யாழ்ப்பாணரால் யாழில் அதை வாசிக்க முடியவில்லை. அதனால் அவர் தனது யாழை உடைக்க முயற்சிக்க, சம்பந்தர் அதைத் தடுத்து 'இறைவனின் தொண்டர்களான நமக்குள் ஏது ஏற்றத்தாழ்வு' என்று கூறி சமாதானப்படுத்தினார். இப்பதிகம் 'யாழ்முரி பதிகம்' என்று அழைக்கப்படுகிறது. அதனால் இத்தல மூலவரும் இப்பெயர் பெற்றார்.
இராமபிரான், பிரம்மா, தரும தேவதை ஆகியோர் வழிபட்ட தலம். எருது வழிபட்டதாகவும் கூறப்படுகிறது.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|